"வாழ்க்கைத் துணைவர் கடவுளின் கொடை என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும் "


பிப்.14,2014. அன்பு உணர்ச்சிப்பூர்வமாக மட்டும் இருந்தால், அதன்மீது உறுதியான எதையும் கட்டமுடியாது, மாறாக, அன்பு என்பது ஓர் உண்மையான உறவு, அது, தனியாக அல்ல, நாம் ஒன்றிணைந்து ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ள, 30 நாடுகளின் ஏறக்குறைய முப்பதாயிரம் தம்பதியரை, காதலர்கள் தினமான இவ்வெள்ளி நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்தித்து அவர்களின் மூன்று கேள்விகளுக்குப் பதில் சொன்ன திருத்தந்தை பிரான்சிஸ், உணர்ச்சிகள் என்ற மண்மீது கட்டப்படும் அன்பு, வரும் போகும், ஆனால் கடவுளிடமிருந்து வரும் உண்மையான அன்பு பாறைமீதான அன்பு போன்றது என்று கூறினார்.
ஆண்டவரிடம் எவ்வளவுக்கு அதிகமாக அர்ப்பணித்து வாழ்கிறீர்களோ அவ்வளவுக்கு உங்கள் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் அன்பாக இருக்கும், இவ்வன்பு தன்னையே புதுப்பித்துக் கொள்ளவும், ஒவ்வொரு துன்பத்தையும் மேற்கொள்ளவும் உதவும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
என்றென்றும் சேர்ந்து வாழ்வதில் பயம், திருமண வாழ்வுமுறை, திருமணக் கொண்டாட்ட முறை ஆகிய மூன்று தலைப்புக்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ், சேர்ந்து வாழ்வது ஒரு கலை, அது பொறுமையான, அழகான மற்றும் வியப்புகலந்த பயணம் என்றும் கூறினார்.
திருமணத்தின் தரம் முக்கியமானது என்றும், தயவுசெய்து, நன்றி, மன்னியுங்கள் ஆகிய வார்த்தைகளை, திருமணம் செய்துகொள்ளப்போகும் இந்தத் தம்பதியர் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஆம் என என்றென்றும் சொல்வதன் மகிழ்ச்சி என்ற தலைப்பில் நடந்த இச்சந்திப்பை, திருப்பீட குடும்ப அவை ஏற்பாடு செய்திருந்தது.