சேவைகள் மூலம் கர்தினால் லூர்துசாமி உலக வரலாற்றில் இடம் பெறுவார்... ஜெ. இரங்கல்
Posted by: Jayachitra Updated: Thursday, June 5, 2014, 17:25 [IST]
 
Jayalalitha

சேவைகள் மூலம் கர்தினால் லூர்துசாமி உலக வரலாற்றில் இடம் பெறுவார்... ஜெ.
இரங்கல் சென்னை: வாட்டிகனில் காலமான கர்தினால் லூர்துசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயத்தின் தூணாகத் திகழ்ந்த கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி மரணம் அடைந்தார் என்ற தகவல் அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த வேதனை அடைந்தேன். கர்தினால் லூர்துசாமி இந்திய கர்தினால்களில் 4-வது கர்தினால் ஆவார். ரோமன் கத்தோலிக்க சபையில் இடம் பெற்ற முதல் தமிழ்நாட்டு கர்தினால் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

பல்வேறு தேவாலயங்களில் பணியாற்றியுள்ள அவர் 1985-ம் ஆண்டு கர்தினாலாக உயர்ந்தார். செஞ்சி அருகே உள்ள கல்லேரி என்ற கிராமத்தில் கர்தினால் லூர்துசாமி பிறந்தார். திண்டிவனத்தில் உள்ள செயிண்ட் அன்னிஸ் பள்ளியில் தொடக்க கல்வி பயின்றார். கடலூரில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியில் உயர்கல்வி படிப்பை முடித்தார். பெங்களூரில் மேல் படிப்பு படித்தார். சென்னை லயோலா கல்லூரியிலும் படித்த அவர் பின்னர் ரோம் சென்று பல்கலைக் கழகத்தில் பயின்றார். 1985-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் மூலம் இவர் கர்தினால் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
சிறு வயதில் இருந்தே சேவைகள் செய்து அவர் கர்தினால் ஆனார். கத்தோலிக்க கிறிஸ்துவ சபைக்கு அவர் செய்துள்ள சேவை, உலக வரலாற்றில் என்றென்றும் அவர் பெயரை இடம் பெற செய்யும். கடவுளை உண்மையாக நம்புபவராகவும், மனிதர்களிடம் நல்ல சகோதரத்துவத்துடனும் அவர் திகழ்ந்தார்.
அவர் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற லட்சக்கணக்கான கத்தோலிக்க சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து நான் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/jayalalithaa-condoles-death-cardinal-lourdusamy-202838.html