Get Adobe Flash player
Goa 20
விசுவாசப் பரப்புதலின் பாதுகாவலர்களாக இருவரைக் கொண்டாடுகிறது நம் தாய்த் திருச்சபை. அவர்களுக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அவர்களுள் முன்னவர்  16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ; பின்னவர் 19 ஆம் நூற்றாண்டு.அவரோ ஓரிடத்திலும் நிலைத்து நில்லாதவர் ; இவரோ, (ஒரே ஒரு முறை உரோம் நகர் சென்றதைத்  தவிர்த்து) இருந்த இடத்தை விட்டு நகராதவர் ; முன்னவர் வாழ்ந்த ஆண்டுகள் 46 ; பின்னவரோ இளம் வயதிலேயே - 24 ஆம் வயதிலேயே- இறைவனடி சேர்ந்து விட்டவர் ; முதலாமவர் மறைப் பணி ஆற்றிய ஆண்டுகள் 10 மட்டுமே! அதற்குள்  பல நாடுகள் பல ஊர்கள்... சென்று இறைமகன் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்துப் பல்லாயிரக் கணக்கான ஆனமாக்களை  இறைவனடி கொண்டு வந்து சேர்த்த பெருமை இவருக்கு உண்டு ; படுத்த படுக்கையாக இருந்த படியே, அவருக்கு இணையாகப் பல்லாயிரம் ஆன்மாக்களை இறைமகன் இயேசுவிடம்  ஈர்த்தவர் இந்த இரண்டாமவர். இவர்கள் யார் எனத் தெரிகிறதா?

அவர்கள்...

 புனித பிரான்சிஸ்  சவேரியாரும் புனித குழந்தை  தெரேசம்மாளும்தான். நாம் வசிக்கும் இந்தப் பிரஞ்சு நாட்டில் மலர்ந்து வாழ்ந்து  மறைந்தவர் தெரேசம்மாள் . நம் முன்னோர்களை நாடி இந்தியா வந்தவர் புனித பிரான்சிஸ்  சவேரியார் . அவர் திரு உடல் இன்று அழியாமல் கோவாவில் உள்ளது. இம்மாதம் 22 ஆம் தேதி அத்திரு உடலை விசுவசிகளின் வணக்கத்துக்கு வைத்திருக்கிறார்கள். வரும் 2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 04 ஆம் நாள் வரை இத்திரு உடலைத் தரிசிக்கும் பேறு  கிடைக்கும்.

 புனிதசவேரியார் (1506 ‡ 1552) இவ்வுலகில் 46 ஆண்டுகள்தான்வாழ்ந்திருக்கிறார். 1537 -இல் குருப்பட்டம் பெற்று 1542 முதல்
இந்தியாவிலிருந்து தன் தீவிர இறைப்பணியைத் தொடங்கி இருக்கிறார். சரியாக 10 ஆண்டுகளே இயேசுவின் மறைப்பணியைச் செய்திருக்கிறார்.

இக்குறுகிய ஆண்டுகளுக்குள் இந்தியா, மலாக்கா, அம்பாய்னாத்தீவு, டொனேத், மோரே தீவுகளிலும், இலங்கையிலும், ஜப்பானின் தென்பகுதியிலும் இறைத் தூதுப்பணி  செய்தார். 1552ல்சீன நாட்டிற்கு இறைப்பணி செய்யத் திட்டமிட்டபொழுதுதான்  மிகுந்த நோய்வாய்ப்பட்டுக் கான்சியன் தீவில் மரணமடைந்தார்.

ஏறக்குறைய 50 நாடுகளில் அவர் திருப்பணி செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.
உலகின் எந்த மூலையிலெல்லாம் இயேசுகிறிஸ்து அறிவிக்கப்படவில்லையோ  அங்கெல்லாம் நான் செல்வதற்குத் தயாராய்இருக்கிறேன்

எனக்கூறித் தீவிர மறைப்பணி செய்தார். 1552 டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை மரித்தார். சீன முறைப்படிஅடக்கம்செய்யப்பட்டார். மூன்றுமாதங்களுக்குப் பின் அவரின்
எலும்புகளையாவது எடுத்துக் கோவாவிற்குக் கொண்டு செல்லக் கல்லறையைத்  தோண்டிய போது அவரின் உடல் அழியாமல் இருப்பது கண்டு வியப்படைந்தனர். 461 ஆண்டுகளாய் அழியாமல் இருக்கும் அத்திரு உடல் இன்றும் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்
பட்டிருப்பது எத்துணை அதிசயம்!
தன் வாழ்வில் உத்தமமாய்ப் பணி செய்த இறை ஊழியருக்கு ஆண்டவர் இயேசு கொடுக்கும் மிகப் பெரிய பரிசு அவர்களின் உடல் அழியாமல் காப்பதே
!

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org